Monday, April 29, 2019

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஒன்றுகூடல்




கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஒன்றுகூடல்

R.N. Logendralingam- Kuru Aravinthan - MP Gary Anandasangaree


சென்ற மாதம் வெள்ளிக்கிழமை 12-04-2019 ஸ்காபரோ பிறெம்லிவீதி தெற்கில் உள்ள குயின்ஸ் பலஸ் மண்டபத்தில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் 25வது வருட நிறைவைக் கொண்டாடும் முகமாக நடைபெற்ற ‘ஒன்றுகூடலும் விருந்துபசாரமும்’ நிகழ்வில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.



கனடா தேசிய கீதத்துடன் நிகழ்வு ஆரம்பித்தது. கனடா தேசிய கீதம் தமிழ்தாய் வாழ்த்து ஆகியன சக்தி சங்கவி முகுந்தன் அவர்களால் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு நிமிட அகவணக்கம் இடம் பெற்றது.  அதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் இணையத் தலைவருடன் நிர்வாகசபை அங்கத்தவர்களின் துணைவியரும்இ துணைவர்களும் ஒன்று சேர்ந்து மங்களவிளக்கை ஏற்றி வைத்தனர்.



அதைத் தொடர்ந்து வரவேற்பு நடனமும் அடுத்து சிவநயணி முகுந்தன் அவர்களின் வரவேற்பு உரையும் இடம் பெற்றன. அடுத்து செல்வி  ஹம்சாஜினி சாந்தகுமரின் உரை இடம் பெற்றது. அடுத்து கவிஞர் கழகத் தலைவர் அகணி சுரேஸ் அவர்களின் சிறப்புரையைம் அதைத் தொடர்ந்து எழுத்தாளர் இணையத் தலைவர் குரு அரவிந்தன் அவர்களின் தலைமை உரையும் இடம் பெற்றதன. மேலும்  குரு அரவிந்தன் தனது உரையில் சிறுகதைப் போட்டிக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமான கதைகள் வந்து சேர்ந்திருப்பதால், முடிவுகளை வெளியிட சிறிது காலதாமதமாகலாம் என்பதைத் தெரிவித்தார். மேலும் மே மாதம் மூன்றாவது வார இறுதியில் முடிவுகள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அறிவிக்கப்படும் என்பதையும் அப்போது குறிப்பிட்டார்.



அதைத் தொடர்ந்து அஞ்சலி ஜெயகாந்தனின்  நடனம் இடம் பெற்றது. அடுத்து செல்வன் காருண் சபேசன்இ திரு. வாசன் ஆகியோரின் பாடல் நிகழ்வுகளைத் தொடர்ந்து செல்வி சுருதி பாலமுரளியின் வயலின் இசை இடம் பெற்றது. இதை அடுத்து நீண்டகால உறுப்பினரான சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் அவர்களின் 75வது அகவை கொண்டாட்டத்தை முன்னிட்டு எழுத்தாளர் இணையத்தால் அவர் கௌரவிக்கப்பட்டார். இணையத்தின் செயலாளரும்இ உதயன் ஆசிரியருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் அறிமுக உரையைத் தொடர்ந்து எழுத்தாளர் இணையத்தின் சார்பாக இணையத்தின் உபதலைவர் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். தொடர்ந்து லட்சுமி வாசன் அவர்களால் அன்பளிப்பும், இணையத்தலைவர் குரு அரவிந்தன் அவர்களால் விருதும் கொடுத்துச் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் கௌரவிக்கப்பட்டார்.



இதைத் தொடர்ந்து கோதை அமுதன் அவர்களின் நெறியாள்கையில் நாட்டிய நாடகம் இடம் பெற்றது. இந்த நாட்டிய நாடகத்திலும் கோதை அமுதனுடன் இளம் தலைமுறையினர் பலர் கலந்து கொண்டனர். அதிக அளவில் இளம் தலைமுறையினர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஒன்றுகூடலாக இம்முறை அமைந்திருந்தது. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மேடையில் கௌரவிக்கப்பட்டனர். சர்வதேச சிறுகதைப் போட்டிக்கும் விருந்துபசாரத்திற்கும் ஆதரவு அளித்த வர்த்தகப் பெருமக்களும் ஆதரவாளர்களும் நிர்வாகசபை அங்கத்தவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.



தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ  ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் இணையத்தலைவர் குரு அரவிந்தன் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். நிகழ்வுகளை லட்சுமி வாசன் அவர்களும் சிவநயணி முகுந்தன் அவர்களும் சிறப்பாகக் கொண்டு நடத்தினர். இணையத்தின் பொருளாளர் க. ரவீந்திரநாதன் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment